பிரதமர் மோடியின் கவர்ச்சி எத்தனை நாட்கள்?

              இந்தியாவை காப்பற்ற வந்தவர்,அவதாரம்,வளர்ச்சியின் நாயகன் என்று தேர்தலுக்கு முன்பு தூக்கி கொண்டாடிய இந்தியமக்கள் இரயில் கட்டண உயர்வு,சர்க்கரை விலை உயர்வு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு,சரக்கு கட்டணங்கள் உயவு,தொடர்ச்சியாக காய்கறிகள்,அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் ஆகிய பிரச்னைகளில் இப்போது  சிக்கித் தவிக்கிறார்கள்.!

           தேர்தலில் மோடிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மட்டும் இந்த பிரசனை இல்லை. வாக்களித்தவர்களுக்கும்,மோடியை வானளாவப் புகழ்ந்தவர்களுக்கும் சேர்த்துதான் இப்போது பிரசனை ஏற்பட்டு இருக்கிறது.

          தேர்தலுக்கு முன்பு  எதையெல்லாம் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடாக,நிர்வாக சீர்கேடாக சொல்லி,பி.ஜே.பி  கட்சி பிரசாரம் செய்ததோ அத்தனை பிரச்னைகளும் மோடியின் நிர்வாக மேம்பாட்டால் அதிகரித்து உள்ளது.

         வெகுஜன மக்களிடம் அரசும்,காங்கிரசின் இமேஜும் சரிந்துவிடும் என்று நினைத்தும்,இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி  இருக்குமே என்ற தயக்கதாலும் காங்கிரஸ் அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை, சீர்திருத்தங்களை மெதுவாக செய்துவந்தது.

         ஆனால்,  மோடியின் அரசு மக்களுக்கு எதிரான,மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களை மிக வேகமாக செய்ய ஆரம்பித்து இருக்கிறது.கசப்பு மருந்தை சாப்பிட்டுதான் ஆகவேண்டும் என்று விளக்கம் சொல்லுகிறது. உண்மையில் அது கசப்பு மருந்துதானா? நோயை குணமாக்குமா?அல்லது உயிரைப் பறிக்கும் விஷமா?  என்று பலருக்கும்  குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

        இதனை மோடியின் அரசின்மீது எனக்குள்ள அதிருப்தியை காட்டவோ, அல்லது வெறுத்தோ எழுதுவதாக யாரும் கருதவேண்டியதில்லை..

         மோடியை பிரதமராக்கிய கார்பரேட்டுகள், பன்னாட்டு முதலீட்டாளர்கள்,  இந்தியாவை சுரண்ட இந்தியாவில் அந்நிய முதலீடுகளை அதிக அளவில் செய்ய உத்தேசித்து இருப்பவர்கள்  மோடியை சுயமாக செயலாற்ற விடுவார்களா? அதுவும் எதையும் உடனே தங்களுக்கு சாதகமாக செய்துகொள்ள நினைக்கும் பேராசை பெருமுதலாளிகள் நிர்பந்தத்தின்  பேரிலேயே மோடியின் அரசு நடந்து கொள்வதாக  தோன்றுகிறது.       ஜூன் 2-ம் தேதியில் இருந்து 27-ம் தேதிவரையில் இந்தியாவில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு ரூ.31764 கோடி செய்யப்பட்டு உள்ளது. இந்திய பங்குகளில்,கடன்பத்திரங்களில்,ஊகபேர வர்த்தகம் என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு இந்திய பொருளாதாரத்தை, உழைப்பே இன்றி அந்நிய முதலீட்டாளர்கள் சுரண்டவும்,கைப்பற்றவும் மேற்கொண்டிருக்கும்  முயற்சியாகும்.

        கார்பரேட்டு கம்பனிகள்,பன்னாட்டு நிறுவனங்கள்,பெருமுதலாளிகள் நலனை விரும்பும் மோடி அரசால், ஏழைகள் நடுத்தரமக்கள் தங்களது அன்றாட வாழ்கையை நடத்துவதற்கே சிரமப்படும் நிலைக்கே ஆளாகி வருவார்கள். அத்தகைய மக்களிடம் மோடிமீது அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி இன்னும் எவ்வளவுகாலம் நீடிக்கும்?  என்பதே நமது சிந்தனையாகும்!    

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?