மாயாவாதமும் சாமியார் மடங்களும்.!

            அனைத்து சாதியினரையும் அர்சசகராக்குவோம்.. கருவறை தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்  என்ற கோஷங்களும் போராட்டங்களும் தமிழகத்தில் மீண்டும் புதுவீச்சில் எதிரோளிகின்றன. 
         தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம் இன்றுவரை நிறைவேறாமல் தொடர்கிறது. தமிழகத்தை பல ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தபோதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை. கோவில் கருவறையில் பார்ப்பனர்களைத் தவிர வேற்றாள்கள் நுழைந்தால் சாமிக்கு தீட்டு பட்டுவிடும் என்று பார்ப்பனர்கள் கூறிவருகிறார்கள்! வழக்குமேல் வழக்கு போட்டு இப்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. 
            கோயிலை கட்ட செங்கல், சிமண்ட்டு , கருங்கல் சுமப்பது, கோயில் சிற்பம்,கடவுள் சிலை செய்வது,   சாரம் கட்டுவது,  கோபுரவேலைகள் செய்வது  அனைத்தும்   பல சாதி மக்கள்.  இந்துக்கள் என்கிறபோது,  கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு மட்டும் அவர்களுக்கு உரிமையில்லை என்பது  என்ன நியாயம்? அவ்வாறு கூறுவது மிகபெரிய சமூக அநீதியாகும்.  
           பார்ப்பனர்கள்  மட்டுமே கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டும், அவர்கள் செய்தால் தீட்டில்லை, பிறசாதி  இந்துக்கள் செய்தால் தீட்டு என்பது  சட்டவிரோதமாகும். இயற்கை நியதிக்கு எதிரானதாகும்.  ஆண்டவன் முன்  சமம்  என்ற தத்துவத்திற்கு எதிரானதாகும்.
        பார்ப்பனர்கள் அல்லாத இந்த உண்மைகள் தெரிந்த இந்து மக்கள் கருவறையில் நிலையாவும்,தாங்களும் அர்ச்சனை செய்யவும் முனைப்புடன் உரிமைகோர வேண்டும். உரிமைகோரி போராட வேண்டும். ஆனால்  அவ்வாறு செய்யாமல்  சும்மா இருப்பது ஏன் என்று தெரியவில்லை.!
        போகட்டும்,  இந்துமத ஒற்றுமையை வலியுறுத்தும்  இந்து அமைப்புகள் இதைப்பற்றி இன்றுவரை எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.  இந்துமத அமைப்புகளைப் போலவே, சங்கர மடம் போன்ற   பல்வேறு  சாமியார் மடங்களும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது குறித்து தங்களது கருத்தை கூறாமல் ஊமைகளாக இருக்கின்றன. 
          அவ்வாறு ஏன் இருக்கின்றன என்று  அறிவுஜீவிகளும் ,ஊடகத் துறை உன்னதங்களும்  சிந்திப்பதில்லை. பொது கருத்தை,விவாதத்தை  ஏற்படுத்தாமல் இருந்து வருகின்றன.
            எல்லாவற்றுக்கும் காரணம்  இந்துமதம், ஆன்மிகம், கோவில்,வழிபாடுகள் அனைத்தும் பார்ப்பனர்களின்  நலத்துக்கும்  இனமேன்மைக்கும்  உள்ளவைகள் என்பதும், அவைகளில் வேறு சாதியினர்  உரிமைகோரவும் , நன்மை அடையவும்   முயலக் கூடாது  என்ற நோக்கம்தான். 
          பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருந்துவருவது ஆதிக்கமும் ,அதிகாரமும் பார்ப்பனர்களைச் சுற்றியே இன்றுவரை இருந்து வருவதையே   காட்டுகிறது. 
           பார்ப்பனர்களின் அதிகார மையங்களாகவே  சங்கரமடம் உள்ளிட்ட சாமியார் மடங்களும்,  இந்துத்துவ அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.  இந்துத்துவ அமைப்புகளின்  தலைவர்களும்,  மடச்  சாமியார்களும்  பலகோடி சொத்துக்களை வைத்துகொண்டு சுகபோகமாக வாழ்ந்துகொண்டு ,ஆடம்பர கேளிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு, பாமரமக்களை  ஏமற்றி வருகிறார்கள்.  இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம்  இல்லை, எல்லாம் மாயை என்று பொய்யாக   கூறி வருகிறார்கள்.
         இந்துமத சாமியார்களும்  இந்துத்துவ அமைப்பினரும்   பாமர மக்களை பற்றியோ, ஒருவேளை உணவுக்கும் வழி இன்றியும், வேலை இன்றியும் தவிக்கும் நிலை பற்றியோ கவலை படுவதில்லை. ! ஆண்டவனுக்கு செய்வதாக சொல்லி அனுதினமும் நெய்வேத்தியம், பாலபிசேகம் செய்து  அவற்றை உண்டு கொழுத்து இருக்கும் இவர்கள் பாமரமக்களுக்கு  அருளாசி கூறுவதற்கு மட்டும் தவறுவதில்லை. ! 
         இந்துமதம்  மேன்மையானது, உயர்வானது  என்று வெறியுடன் அலையும் (பார்ப்பனர் அல்லாத )  இந்துக்கள் சிந்திக்க வேண்டும்.  ஆலயத்தில் இருந்து பார்ப்பனர்களை வெளியேற்ற  போராட  வேண்டும். 
 

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?