தகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.

      மத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகளும் தகவல் வழங்கவேண்டும் என்று அறிவித்து இருக்கிறது ! பொதுவாக வரவேற்கத்தக்க செயலாக இது தெரிந்தாலும், இதனை அதாவது சட்டத்தை செயல் படுத்துவது  நடைமுறையில்  சாத்தியமில்லை என்பது உண்மையாகும்!

      அரசு நிறுவனங்கள், 30-நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. சட்டப்படி  30- நாட்களுக்குள் தகவல் வழங்காவிட்டால் மேல் அதிகாரிக்கு முறையீடு செய்யவும், அவரது தலையீட்டுக்கு பிறகும் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றால்,  ஆணையத்துக்கு  மேல் முறையீடு செய்தால் தகவல் ஆணையம் நேரடி விசாரணைநடத்தும்!

      நியாமான காரணங்கள் இன்றி,  தகவல் வழங்குவது மறுக்கப்பட்டது தெரிய வந்தால்  தகவல் வழங்க மறுத்தும்,காலதாமதம் செய்தும் வந்த பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச்சட்டமீறலுக்காக  நடவடிக்கை எடுக்கப்படும் . தொடர்புடைய  பொதுதகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகிறது!

       ஆனால் நடைமுறையில் பொதுதகவல் அலுவலர்கள் குறித்த காலத்தில் தகவல் வழங்குவதில்லை! வழங்கும் தகவல்களும்கேட்கும்  தகவல்களாக இருப்பது இல்லை!  இதுபற்றி  முறையீடு செய்தாலும் முறையாக ஆணையமே முறையாக விசாரணை நடத்துவது இல்லை! என்பதுதான் எதார்த்தமாக உள்ளது!

       பொது தகவல் அலுவலர்கள் தகவல் வழங்காமல் காலதாமதப்படுத்தி வருகிறார்கள் அல்லது  தகவல்   வழங்காமலேயே வழங்கியதாக பொய் சொல்கிறார்கள்!   வேறு ஒருவருக்கு உரிய தகவல்களை வேண்டும் என்றே   மாற்றி அனுப்புவது,  தகவலுக்கான  இணைப்பு நகல்களை  வழங்காமல் இணைப்பு நகல்கள்  வழங்கியுள்ளதாக கூறுவது  போன்ற அனைத்து ஒழுங்கீனங்களையும்,தகிடு தத்தங்களையும்  செய்து வருகிறார்கள்.

     ஆணையத்திடம் முறையிட்டாலும்,இதனை  ஆதாரத்துடன் நிரூபித்தாலும் தகவல் ஆணையமே   சட்டை செய்வதில்லை. அது பொது தகவல் அலுவலர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் நிலையில்  இருந்து வருகிறது!

     எனக்கு தெரிந்த ஒருவரின் பழைய தவறை சுட்டிக்காட்டியும், தகவல் பெறும் மனுக்களை அனுப்பி அவர் தொல்லை தருவதாகவும் இதுவரை 74 மனுக்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார். ஒரு மனுவுக்கு கூட உருப்படியாக,உண்மையான தகவல்களை தராத காவல் துறை அலுவலர்  தந்த அறிக்கையை தகவல் ஆணையம்  எந்த ஆதாரமும் இன்றி  அப்படியே  ஏற்றுகொண்டது!

     அவர் கடந்த காலத்தில் செய்த தவறு என்ன? அதாரம் இல்லை! 74 மனுக்கள் அனுப்பினாரே அதற்கு எத்தனை மனுக்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்பட்டது? ஆணையம் கேட்கவே இல்லை!

       போகட்டும் ,74 மனுக்கள் அனுப்பியதாக பொதுத் தகவல் அலுவலர் சொல்கிறாரே ?அந்த மனுக்களை  சமர்பிக்கும்படி ஆணையம் கேட்கவே இல்லை!

     இந்த விவரங்களை பெற்று தருமாறு ஆணையத்திடம் பல முறையீடுகள் செய்தும் ஆணையமே  கண்டு கொள்ளவில்லை! இந்த லட்சணத்தில் தான் தகவல் ஆணையங்கள்  சட்டத்தை செயல் படுத்துகின்றன.!

       ஆணையத்தில் உள்ளவர்களும் அரசு அலுவலர்கள் தானே? அங்கும் ஊழலும் ஒழுங்கீனமும் இல்லாமல் போய்விடுமா என்ன?

      அரசு அலுவலர்களிடம் தகவல் கேட்கும் போதே, அடியாட்களை விட்டு மிரட்டுவதும், அதிகாரிகள் சார்பாக அரசியல்வாதிகள் மிரட்டுவதும்  நடந்து வருகிறது!

     தகவல் கேட்டதற்காகவே கொலையானவர்கள்,தாக்குதலுக்கு ஆளானவர்கள்  இந்தியாவில் பலர் உள்ளனர். இந்த லட்சணத்தில்  சாமானிய மக்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து தகவல்களை பெறுவது நடக்கிற காரியமா?  தகவல் கேட்பவர்களை அரசியல் கட்சிகள் சும்மா விடுமா?

   அரசியல் கட்சிகளும், அரசு அலுவலர்களும் காந்தியின் கொள்கைகளைக் கடைபிடிக்கும் அகிம்சாவாதிகள் என்று நினைத்து  தகவல் ஆணையம்  செயல் படுவதாக தோன்றுகிறது!

     இந்த நாட்டில் நடைமுறை படுத்தப்படும்  எந்த சட்டமும்  ஏழைகளைதான் மிரட்டும்,ஏமாற்றுமே தவிர.. அரசியல் வியாதிகளை, அரசு அலுவலக பெருச்சாளிகளை ஒன்றும் செய்யாது,ஒன்றும் செய்ய வக்கற்றது என்பதுதான் நிஜமாகும்,Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?