ராமதாஸும் காந்திய சிந்தனைகளும்!

        படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழிக்கு உதாரணமாக யாரையாவது சொல்ல முடியும் என்றால், டாக்டர் ராமதாஸை சொல்லலாம்!

       சமூக நீதி,சமத்துவம், சம உரிமைகளுக்காக, போராடிய அண்ணல் அம்பேத்கர்,பெரியார்  ஆகியோர்களின்  கருத்துக்களை  உள்வாங்கிக்கொண்டு அரசியல்,சமூக பணிகளை ஆற்ற வந்தவர்,  மருத்துவர்  ராமதாஸ் அவர்கள்!   தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட ,சிறுபான்மை சமூக மக்களின் வாழ்க்கை  நிலைகள்,அரசியல் பொருளாதார  நிலைகள் குறித்து அந்த சமூகத்தினரைக் காட்டிலும் அதிகம் தெரிந்து கொண்டிருப்பவர்!

          கடந்த காலங்களில்,மருத்துவர் ராமதாசும்,அவரது பாட்டாளி மக்கள் கட்சியும் மேலே சொன்ன  விஷயங்களை தங்களது கொள்கைகளாக கொண்டு செயல்பட்டது!

        தேர்தல் அரசியலில் தனக்கு ஏற்பட்ட தோல்விகளால், ஒடுக்கப்பட்டு வரும் தலித்,பிற்பட்டோர்,சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்து, அவர்களின் அரசியல் அதிகாரத்துக்காக,பொருளாதார முன்னேற்றத்துக்காக, வாழ்க்கை மேம்பாட்டுக்காக போராடும் உயரிய லட்சியத்தில்  இருந்து ராமதாஸ் விலகிசென்றுவிட்டார்!

       இன்று சாதியம்  என்ற கொடிய ஆயுதத்தை  கையில் எடுத்துக் கொண்டு  எந்த சமூக மக்களுக்கு ஆதரவாக  போரடவேண்டுமோ,அந்த சமூக மக்களுக்கு  எதிராக  நடந்துவருகிறார்!

        ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய  தலித்துகளையும்   வன்னியர்களையும்  பிளவுபடுத்தி விட்டார்!  அந்த  மக்களின் வாழ்வையும், பொருளாதரத்தையும்,எதிர்காலத்தையும்  சீரழிக்கும்   நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்!  சமூக விடுதலைக்கு அரசியல்  முன்னேற்றத்துக்கு  அடித்தளம் இட்டு, போராடிய சமூக  விடுதலைப் போராளிகளுக்கு எதிரான, பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் லட்சியங்களுக்கு எதிராக  இன்று செயல்பட்டு வருகிறார்!

        ராமதாஸின் இன்றைய  நிலைப்பாட்டால், தமிழகத்தில் பெரும்பான்மையினரான   தலித்துகளும், வன்னியர்களும்  சேர்ந்து செயல்படும் நிலை தடுக்கப்பட்டு இருக்கிறது! இரண்டு சமூகங்களும் சேர்ந்து   அரசியல்  அதிகாரத்தில் முக்கியத்துவம் பெறும்   சூழ்நிலையும்  தடுக்கப்பட்டு இருக்கிறது!  இரண்டு சமூகங்களும்  பகைமை உணர்வுடன் வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டு  விட்டது!  இரண்டு சமூகங்களின் அடிப்படை உரிமைகளும், வாழ்வாதாரங்களும்  பதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது! இவ்விரு சமூகங்களும் தொடர்ந்து  பிற சமூகங்களால் அடிமைபடுதத்ப்பட்டு,அடக்கி வைக்கப்பட்டு, ஆளப்படும்  நிலைக்கு ஆளாகியுள்ளன!

       பெரியாரை படித்த ராமதாஸ், பெரியாருக்கு முரணாக செயல்பட்டு வருகிறார்!   திருச்சி சிறையில்  காந்தியின் சிந்தனைகளை ராமதாஸ்  படித்துகொண்டு இருக்கிறார்!  காந்தியின் அகிம்சை,தீண்டாமை, போன்ற தத்துவங்களும்,  சிந்தனைகளும் ராமதாசிடம் என்ன மாற்றத்தை  ஏற்படுத்துமோ தெரியவில்லை!


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?