மாறாத மிருக மனத்தினர்...

         நமது அரசியல்வாதிகள் ஆட்சி நடத்தும் லட்சணத்தை அவகளது செயல்கள் மூலம் மட்டுமின்றி சொற்கள் மூலமும் தெரிந்துகொள்ள முடிகிறது!

        உத்திரபிரதேச மந்திரி ஒருவர், 'அவை அடக்கம் இன்றி', நாவடக்கம் இன்றி, பெண் ஆட்சிதலைவர் ஒருவரை அழகாக இருப்பதாக  மேடையில் பேசி கண்டனம் செய்யப்பட்டார்! பெண்ணின் கன்னங்களைபோல  பளபளப்பான சாலை அமைக்கபடுவதாக மீண்டும்  பேசி பதவியை இழந்தார்!

       அதே  உத்திர பிரதேச  மாநிலத்தில் ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும்,  "ஷிவ் குமார் பேரியா"   என்ற அமைச்சர்,  நான் சொன்னால்தான் காவல்துறையினர் உட்காருவார்கள் எனது பேச்சை கேட்காவிட்டால் 24-மணி நேரத்தில் அவரை வேலையை விட்டு தூக்கி விடுவேன், நான் 5 முறை எம்.எல்.ஏ  என்றெல்லாம் பேசி தனது அதிகாரத்தை,அதிகார மமதையை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார்!

        ஏற்கனவே,காவல்துறையினர்  பொதுமக்களின் நலனுக்கு பணி செய்வதை விடுத்து,சட்டம் ஒழுங்கை காப்பதை விடுத்து, ஆட்சியாளர்களின்  விருப்பப்படி நடந்துவரும் நிலையில்,  இதுபோல அமைச்சர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் பேசுவதும் காவல்துறைக்கு பகிரங்க எச்சரிக்கை விடுவதும் ஆபத்தானது!

     அதாவது சட்டப்படி  எனது விருப்பம்  தவறாக இருந்தாலும், எனது விருப்பபடி காவல்துறை நடந்துகொள்ளவேண்டும் அதனை நிறைவேற்ற வேண்டும்  இல்லை என்றால் வேலையில்  இருந்து உன்னை தூக்கி விடுவேன்  என்று மிரட்டுவது, அவரது  எதேச்சாதிகார,சர்வாதிகார  மனோபாவத்தை காட்டுகிறது!

         ஜனநாயக ஆட்சி முறையில்,மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், ஜனநாயகத்துக்கு  எதிராக செயல்படுவதை இதுபோன்ற  பகிரங்கமான  பேச்சுகள்  தெரிவிகின்றன!

       மற்றொருஅமைச்சர் , உ.பி.யின் சமூக நலத்துறை அமைச்சர், 'ராம் மூர்த்தி வர்மா' என்பவர், காவல்துறைக்கு பரிந்து  பேசுவதாக எண்ணிக்கொண்டு, காவல்துறையின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.  "குற்றங்கள் முன்பும் நடந்தன,  இப்போதும் நடக்கின்றன,   இனியும் நடக்கும் " என்று பொறுப்பில்லாமல்  பேசுகிறார்!

           எப்போதும் குற்றங்கள் நடக்கும் என்றால், காவல்துறை எதற்கு? இவரைபோன்ற மந்திரிகள் எதற்கு?

           இதைவிட கொடுமையானது  மத்திய  பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர், "சத்தியேந்திர கட்டாரா "என்பவர் கூறி இருப்பதாகும்!

        " ஒரு பெண் தவறு செய்யும் நோக்கத்தில், ஆணைப் பார்ப்பதால்தான்     அவளை  ஆண் தொந்தரவு செய்கிறான் "என்று   ஒட்டுமொத்த பெண்களின் மீது  பழியை போட்டு,  ஆண்களை நல்லவர்களாக சித்தரிக்க முயன்று இருக்கிறார்!

          ஐந்து வயது சிறுமி,ஆறுவயது சிறுமிகள் எந்த நோக்கத்தில் ஆணைப் பார்த்தார்கள்? அவர்கள்  பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள்?

         சமூகத்தில் புரையோடிபோய் உள்ள வக்கிரங்களுக்கு என்ன காரணம் அதனை களைவது எப்படி என்பது குறித்து  சிந்திக்காமல், தான்தோன்றித் தனமாக  இதுபோல  கூறுபவர்களை  பார்க்கும்போது, இவர்களை எல்லாம்  மனிதர்களாக கூட நினைக்க முடியாது!  அனால் இவர்கள் எல்லாம் மிக முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளார்கள்!

        "நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்  நக்குற புத்தி " உள்ள இந்த ஆசாமிகளை, மன வக்கிரம் உள்ள மிருகங்களை   என்ன செய்வது?


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?