பயிரை மேயும் வேலிகள் !

        சட்டத்தின் முன்பு அனைவரும்சமம்  என்று பேசப்படுகிறது!  ஆனால், நடைமுறையில்  சட்டத்தின் பயன்கள்  அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை!

        வசதிபடைத்த, பணக்காரகளுக்கும்,பெரிய தொழில் அதிபர்களுக்கும் சட்டம் மட்டுமல்ல,ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும்,ஆள்பவர்களும் கூட கைகட்டி சேவகம் செய்யும் நிலைதான் நடைமுறை எதார்த்தமாக உள்ளது!

         ஏழைகளுக்கு  எப்போதும் நீதி மறுக்கப்பட்டு வரும் நியதியே, இந்திய நீதியாக இருப்பது வேதனையாகும்!

        சாமானிய மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராடும்போது கூட , அவர்களது நியாயங்களும், கோரிக்கைகளும்  ஏற்கப்படுவதில்லை! மாறாக,  அவ்வாறு உரிமைகேட்டு, நீதி கேட்டு  போராடும் சாமானிய மக்களை காவல்துறையும்,ராணுவம்   போன்ற அரசு அமைப்புகள் மூலம் அடக்கி,ஒடுக்கவும்,அவர்களை மிரட்டி பயமுறுத்துவது  நடக்கிறது!

         உத்திரபிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் வியாழன் அன்று காணமல் போன  தனது மகள் குறித்து போலீசிடம் முறையிட்டும்  நடவடிக்கை இல்லை என்பதால் ,   கண்டித்து போராடிய பெற்றோர்களையும்,அவர்களது உறவினர்களையும்  கண்மூடித்தனமாக போலீசார் தாக்கி உள்ளனர்!

     காணமல் போன  சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு உள்ளார்!  குப்பைகளுக்கு நடுவில்அவளது உடல்  வீசி எறியப்பட்டு,பிறகு  கண்டெடுக்கப்பட்டு உள்ளது!

       சாமானிய மக்களின்  உயிர்களை குப்பைக்கு சமமாக மதிக்கும் சமூக அவலங்கள் நடந்து வருகின்றன!  இத்தகைய  கொடுமைகளுக்கு  எதிராக செயல்படவேண்டிய  காவல்துறை,  சிறுமியின்  பெற்றோர்களை மிருகத்தனமாக தாக்கி உள்ளனர்! காவல்துறை சமூக கொடுமைகளை களைவதை விட்டுவிட்டு,பதிக்கப்படும் சாமானிய மக்களை   மிரட்டுகிறது !

      பொதுவாக  போலீசார்,  சட்டம் ஒழுங்கை காப்பதையும், சாமானிய மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம்  தருவதையும் விட்டுவிட்டு, ஆள்பவர்களின்  ஏவல் நாய்களாகவும், உயர் அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப  ஊளையிடும்  நரிகளாகவும்  நடந்துகொள்ள தொடங்கிவிட்டனர்! போலீஸ் என்ற துறையின்  பொறுப்பும் கடமையும்,நோக்கமும் சிதைந்து விட்டது!

       சமூக சீர்கேடுகளுக்கும், குற்றங்களுக்கும்,போலீசார்  காரணமாகி வருகின்றனர்! குற்றங்களை தடுக்கவேண்டிய போலீசார் , குற்றங்களுக்கு  உடந்தையாகவும், குற்றவாளிகளை காப்பாற்றவும்,குற்றவாளிகளுக்கு   ஆதரவாகவும் செயல்படும் அவலம் தொடர்ந்து  நடந்து வருகிறது!

      உத்திர பிரதேசத்தில் இப்போது நடந்துள்ளது  சமீபத்து உதாரணம்! குஜராத் கலவரம், போலி என்கவுண்டர்கள், வாச்சாத்தி கொடூரங்கள், மதுரை  பத்மினி,தளி கல்பனா போன்ற கற்பழிப்பு கொடூரங்கள் என்று ஆயிரகணக்கான  கொடும் செயலுக்கு  போலீசார்  காரணமாக இருகின்றனர்! வெளியே பயிரை மேய்ந்தால்  விவசாயி போவதெங்கே?

       போலீசாரின்  இத்தகைய முறைகேடுகளை தடுக்க ஆட்சியாளர்கள்  யாரும் முன்வருவதில்லை!  பொது மக்களின்மீது  அக்கறை கொண்ட அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது!


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?