நமக்கு சொல்லும் பாடங்கள்!

             தனக்கு  துன்பம் விளைவிக்காத, தன்னை எதிர்க்காத வாலியை,     ராமன் மறைந்து இருந்து  அம்பு எய்து  கொன்றான்.!  தனக்கு துன்பம் விளைவித்தவன்,தனது மனைவியை கானகத்தில் இருந்து கடத்திச் சென்று துன்புறுத்திய ராவணனை... ராமன்  நேரடியாக  எதிர்த்து போர் தொடுக்கிறான்!

           வாலியை மறைந்து இருந்து கொன்றது ராமனின்  தவறு,  அவனது புகழுக்கு இழுக்கு என்று வாதிப்பவர்கள் உண்டு! ராமன்  தன்னிடம் அடைகலம் அடைந்த சுக்ரீவனுக்கு  உதவ  வாலியைக் கொன்றது சரி என்று வாதிப்பவர்கள் இருகிறார்கள்!

          இராவணன் தனது படைகளை இழந்து,தேர்,கோடி,வில்,வாள் போன்ற ஆயுதங்களை இழந்து, நிராயுதபாணியாக  போர்களத்தில்  நின்றபோது, அவனைக் கொல்லாமல்,  "இன்று போய் நாளை வா" என்று வழியனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள்! அப்படி பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சம் கொண்டிருந்த  ராமன்,  வாலியை...  அதுவும் அவனை எதிக்காத நிலையில், சுக்ரீவனுடன்  சண்டையிடுவதில் கவனத்தை செலுத்தி இருந்த நேரத்தில், மறைந்து இருந்து வாலியை  கொன்றது ஏன்? என்ற நெருடல்   எப்போதும் இருந்து வரும் நெருடலாகும்!

          இந்த முரண்பாட்டுக்கு  இப்போதுதான்  ஒருவாறு  எனக்கு பொருள் புரிகிறது!  ராமாயணம்  உண்மையாக நடந்தது இல்லை! அது ஒரு கற்பனைக் கதை  என்ற விவாதங்களை  தள்ளிவைத்துவிட்டு ஆராய்ந்தால், இந்த வாலியின் வதம்  ஒரு  முரண்பாடு  என்பது புரியும்!

          இத்தகைய முரண்பாடுகள் இதிகாசம் என்று சொல்லப்படும்  ராமாயணத்திலும்  மகாபாரத்திலும் அநேகம் உள்ளன! ஆனாலும் ராமாயணத்தையும்  மகாபாரத்தையும் இன்றுவரை  ராமனின் அவதாரக் கதையாகவும்,ராமனின்  பெருமையைக் கூறவும் பலரும்,குறிப்பாக பிராமணர்கள்,வைணவர்கள்  சொல்லிவருகின்றனர்! "இப்படிதான் நடந்தது"  என்பதற்கு  பொருள்தான்  "இதிகாசம் " என்று ஒருபுறம் கூறிக்கொண்டே  இவ்விரு கதைகளையும் தங்கள்  விருப்பத்திற்கு ஏற்றமாதிரி  வெட்டியும் ஒட்டியும்  திரித்தும், சேர்த்தும் இன்று  ராமாயணமும் மகாபாரதமும் தொடர்ந்து  சொல்லப்பட்டு வருகின்றது! படக்கதைகளாக, தொலைக்காட்சி மூலமாக, பத்திரிகைகள்,இதழ்கள் வாயிலாக  இக்கதைகள் பரப்பப்பட்டு  வருவதற்கு  பல காரணங்கள் உள்ளன!

         இந்துமதம் தனது  கட்டமைப்பை  இழந்து வருவதும்,தனது பகுத்தறிவுக்கு ஒவ்வாத  மூட நம்பிக்கைகளை விட்டுவிட்டு, கல்விபயின்ற  இளைய தலைமுறையினரை  திருப்தி படுத்த வேண்டியது இந்துமதவாதிகளுக்கு  அவசியமாக உள்ளது!

          இந்துக்கள்  என்று வகைப்படுத்தப்பட்ட பிராமணர்கள், உயர்சாதி இந்துகளைத் தவிர,  மற்ற இந்துமக்கள்  மதம் மாறுவதை தவிர்க்க இத்தகைய கதைகள் உதவும்  என்பதும் ஒரு காரணமாகும்!

         இந்துமதப் பெருமைகளாக  இவைகளைக்கூறி, இந்துக்கள் அல்லாத சிறுபான்மை  மக்களை  வெறுக்கவும்,அவர்களுக்கு எதிராக செயல்படவும் இந்துமக்களை அணிதிரட்ட வும்   திரிக்கப்பட்ட  ராமாயணமும்,மகாபாரதமும் இந்து மதவாதிகளுக்கு உதவுகிறது!

        இவைகளைத்தவிர  இவ்விரு கதைகளை தொடர்ந்து சொல்லுவதன் மூலம்  இவைகளே உன்னதமானவை, இவைகளைத்தவிர  தமிழில் சிறந்த இலக்கியங்கள்,புதினங்கள் இல்லை என்ற மாயையை  ஏற்படுத்தி, தமிழ் இலக்கியங்களும்,அறநூல்களும் இருட்டடிப்பு  செய்யவும்  பயன்படுகின்றன!

       தமிழ் இனத்துக்கு எதிரான, தமிழ் இலக்கியங்களுக்கு எதிரான, தமிழர்களின்  நாகரீகம், பண்பாட்டுக்கு எதிரான  சித்தரிப்புகளை தொடர்ந்து செய்து,   தமிழ் மொழியை,அதன் சிறப்பை, தமிழின்   வரலாற்றை அழிக்கும் முயற்சியாக  இவ்விரு கதைகளும்  தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன!

        இவைகளை தவிர,   இவ்விரு கதைகளை  தொடர்ந்து பிராமணர்களும் அவர்களது  ஆதரவு பத்திரிக்கைகளும்,ஊடகங்களும் பரப்புவதற்கு முக்கியமான காரணம் உள்ளது!

       ராமாயணமும், மகாபாரதமும்  பிராமணர்களின் ஆதிக்கத்தை தொடர்ந்து இந்தியாவில் நீடிக்கவும், தக்கவைக்கவும் உதவும் செயல் திட்டங்கள் அவை என்பதாகும்!

       வலிமையான எதிரியை, என்னமாற்றல்,செயல் என ...ஒருமுகப்பட்ட, திறமை உள்ளவனை   "வாலியை  ராமன் மறைந்து இருந்து கொன்றதைப் போல"  நடந்துகொண்டு   ஒழிக்கவேண்டும்.  ராவணனைப்போல  பற்று உள்ளவனை,ஆசாபாசம்  உள்ளவனை,தனது எண்ணம்,செயல்,ஆற்றல் ஆகியவைகளை ஒருமுகப்படுதாமல்  உள்ளவர்களை  நேரடியாக  மோதி வெற்றிகொள்ளலாம்  என்பதுபோன்ற  அறிவுரைகள் இதிகாசத்தில்  இருப்பதுதான்!

        தமிழின வெறுப்பில் இருந்த இந்திய ஆட்சியாளர்கள்,  வாலியைக் கொன்றதைபோல  "தங்களை மறைத்துக்கொண்டு", இலங்கைத்  தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்தார்கள்! இனியும் அவ்வாறே செயல்படுவார்கள்  என்பதுதான்  ராமாயண வாலி நமக்கு சொல்லும் படிப்பினையாகும்!Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?