நீங்க என்ன நினைகிறீர்கள்?

        மகாத்மா காந்தி அவர்கள், உடுத்த வேறு ஆடை இன்றி,தான் கட்டியிருந்த சேலையின் ஒருபகுதியை உடலில் சுற்றிக்கொண்டு,மறுபகுதியை துவைத்துக் கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து கலங்கி,அன்றிலிருந்து அரை ஆடையுடன் காட்சியளித்தார்!

      தனது தாயின் வேண்டுகோளை விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால் தண்ணீர் குழாயைப் போட மறுத்து நிராகரித்தார் காமராஜர்!

         சாதாரணவகுப்பில்  ரயில் பயணத்தை செய்தும் காசை சிக்கனப்படுத்தி, அறிவுகண்ணைத் திறக்க மலிவு விலையில் புத்தகங்களை அச்சடித்து விநியோகித்தார் தந்தை பெரியார்!

       கட்சிப்பணம் ஆயிரக்கணக்கில் இருந்தும்,அதனை பயன்படுத்தாமல்,அந்த பணத்தில் தேநீர் வங்கிக் குடிக்கவும் விரும்பாமல் பட்டினி கிடந்தார் தோழர் ஜீவா!

        பொது வாழ்கையில்,சமூக நலத்தில் அக்கறைகொண்டவர்கள்  அன்று நடந்துகாட்டிய செய்கைகள் இவைகள்! இந்தியா சுதந்திரம் அடைந்து எவ்வளவோ ஆண்டுகள் கடந்துவிட்டது! இன்றும் நமது நாடு  அடிப்படை தேவைகளில் கூட தன்னிறைவு அடைய இயலவில்லை! சுதந்திர இந்தியாவில் இன்றும் நாற்பது சதவிகிதத்தினர்  வறுமையில் வாடுகிறார்கள்! அடிப்படை உரிமைக்காக போராடிக்கொண்டு இருக்கும் அவலம் தொடர்கிறது!    
      எல்லாவற்றுக்கும் காரணம்  பொதுநல நோக்கம் எனபது அரசியலில் இருந்து  மாறிவிட்டதுதான்! அரசியல் என்பது குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும்  வியாபாரமாக இன்றைக்கு பலரும் கருத்வதுதான்! இப்படி கருதும் நிலை  ஏற்பட்ட பிறகு,ஜனநாயகத்தின் உன்னதப் பண்புகள்,ஜனநாயகத்தின்  மாண்புகள்  கேலிக்குரியதாக ஆகிவிட்டது!

      ஒரு தேசிய இனமான தமிழினத்தின் மீது நடந்த தாக்குதலாக, அந்த இனத்தை  அளிக்கச் செய்த கொடூர நிகழ்வாக  கருதாமல் இன்றுவரை தமிழினம்  போராடிக் கொண்டு இருக்கிறது! பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்  நடந்துவிட்ட கொடுமைகளுக்கு நியாயம் கேட்டு,தன எழுச்சியாக போராட்டம் நடத்துகிறார்கள்! ஐ.நா சபையில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசு தயங்கி வருகிறது.! பாசிச ராஜபட்சேவுக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகிறது!

         இரோம் சர்மிளா அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால்,அவர் மீது தற்கொலை  முயற்சி என்று வழக்கு போட்டு பயமுறுத்துகிறது ! இப்படி செய்வது  எந்தவித ஜனநாயகம்  என்று தெரியவில்லை!  காந்தியடிகள் நடத்திய அறபோராட்டத்தை  ஆங்கிலேயர்கள் மதித்தார்கள்! காந்தியால் சுதந்திரம் பெற்ற காந்தியவாதிகள்  மதிக்கவில்லை!   அவமதித்து வருகிறார்கள்!

           இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ,இந்தியாவில் இனி அகிம்சையான,  சாத்வீகமான,அமைதியான போராட்டங்களால்  எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை  என்பதுதான்!

         குமுறிக்கொண்டு இருக்கும் இளைய சமூகத்தை,அகிம்சைவதிகளை, அவர்கள் நடத்து அற போராட்டங்களை  அரசு  மதிக்காமல் நடந்து   கொள்வது நல்லதல்ல!  காந்திய வழி போராட்டங்களால்  பயன் இல்லை என்று இளைய தலைமுறையினர்கருதி, நேதாஜி  சுபாஷ் சந்திர போஸ் வழியில் போராட இறங்குவதற்கு முன்பு இதனை ஆட்சியாளர்கள்  புரிந்து கொள்ளவேண்டும்!

        இல்லையென்றால்," காந்தி தேசம் "என்றும்  "அகிம்சைவழியில் நாம் சுதந்திரம் பெற்றோம் "என்று சொல்வதும் அர்த்தமற்றதாகிவிடும்!

        காந்திய கொள்கைகளை  வலியுதுவதாக சொல்லும் ஆட்சியாளர்கள் தங்களது கொள்கைகளை கைவிடுவது அவர்களுக்கும் நல்லதல்ல! தேசத்திற்கும் நல்லதல்ல!! முதலில் அதனை புரிந்துகொள்ள வேண்டுவது களத்தின் தேவையாகும்!
   
        " நம் நாட்டு மக்கள் மிக நல்லவர்கள்! கோவணத்தை( இழந்தவனை) விட்டவனை கல்லால் அடிப்பார்கள் கொள்கையை விட்டவனை மந்திரியாக ஆக்குவார்கள் "என்று கண்ணதாசன் சொல்வார்!

        கொள்கைகளை இழந்து மந்திரியாக இருப்பவர்கள் மீது மக்களுக்கு  எப்போது  கோபம் வருமோ? அப்போதுதான் ஜனநாயகம்  தழைக்கும் என்று எண்ணுகிறேன்! நீங்க என்ன நினைகிறீர்கள்?


Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?