பலிகளும், பட்டாசு தொழிலும்!

   சிவகாசி பட்டாசு விபத்து சமீபத்தில் நடந்த மிகப்பெரும் சோகம்!

      இந்த ஆண்டில் பத்துக்கு மேற்பட்ட விபத்துகள்  நடந்துள்ளன! ஒன்பது முறை பட்டாசு தொழிற்கூடங்களில் விபத்து நடந்தபோதும்  கண்டுகொள்ளாத, தடுப்பு முறைகளை கடை பிடிக்காத  பட்டாசு ஆலை முதலாளிகள்,பத்தாவது முறையாக...  பல அப்பாவி தொழிலாளர்களின்  உயிரைப் பறித்த பிறகு, இறந்த உயிர்களுக்கும்,நடந்த விபத்துக்கும்  துக்கம் அனுசரிக்க போவதாக அறிவிகிறார்கள்!

          பத்துக்கும் மேற்பட்ட விபத்து நடந்து  பல உயிர்கள் பலியானபிறகு, தவறு நடந்துவிட்ட பிறகு  எதிர் காலத்தில்  இதுபோன்ற தவறு நிகழக்கூடாது  என்று காட்டிகொள்வதற்கும்,அரசும் நிர்வாகமும் சரியாக இயங்குவதாக கட்டுவதற்கும்  பட்டாசு தொழிற்சாலைகளின்  பாதகாப்பு குறித்தும், விபத்துகளைத் தடுப்பது குறித்தும்  குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய போவதாக அரசும் அரசு அதிகாரிகளும்  அறிவிக்கிறார்கள்!

        தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதே  அரசின் வேலையாக இருக்கிறது! விபத்து போன்ற விபரீதங்கள் நடந்த பிறகு,  அரசு அறிவிக்கும் இதுபோன்ற நடைமுறைகளால்  புதிதாக எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை ! சிறிது  காலத்துக்குப் பிறகு  புதிதாக நடைமுறைப் படுத்தபட்ட விதிமுறைகள் , சட்ட திட்டங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, தங்கள்  விருப்பம்போல் நடந்துகொள்ளவதும், அரசு அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் போவதும் வாடிக்கையாகி விடுகிறது!  அவ்வாறு பிறகு நேர்ந்தாலும்  விபத்துகளில் தொழிலாளர்கள்  இறந்துவிட்டாலும் ,  ஒரு லட்சமோ,இரண்டு லட்சமோ நிவாரணம் கொடுப்பதோடு,அரசு  தனது கடமையை முடித்துக்  கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க போயவிடும்!

       பட்டாசு போன்ற பொருட்களால் இப்படி மனித உயிர்கள் பலியாவதும் அரசு அலட்சியமாக செயல்படுவதும் ஒருபுறம் இருக்கட்டும்! உண்மையிலேயே பட்டாசு நமக்கு தேவைதானா? மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றா?
முன்பெல்லாம் ஏதோ தீபாவளி பண்டிகை என்றால்,அன்றுமட்டும்  தேவைப்படும் பொருளாக இருந்த பட்டாசு இன்று  நுகர்வு கலாச்சாரத்தாலும், சிலரின் சுயநலத்துக்கு ஆகவும்  எப்போதும் பயன்படுத்தும் பொருளாக ஆக்கப்பட்டு உள்ளது!

      இந்தியாவில்  இப்போது  ஒருவிதமான  பட்டாசுபோதை ஏற்றப்பட்டு உள்ளது!  யாராவது இறந்துவிட்டாலும்  பட்டாசு வெடிக்கிறார்கள்.! தேர்தலில் நாமினேசன் போடப்  போனாலும், போட்டுவிட்டு(? ) வந்தாலும் வெடிக்கிறார்கள்!  ஜெயிச்சா  வெடிக்கிறார்கள்.! யாராவது தலைவர்கள் வந்தால், வரவேற்க வெடிக்கிறார்கள்.! தலைவர்கள் பிறந்த நாளுக்கு வெடி வைக்கிறான் ! ஊர்வலமா? அதற்கும்  பட்டாசு வெடிக்கிறார்கள். மாநாடா  அப்போதும் பட்டாசு சத்தம் கேட்கிறது! கிரிகெட்டுல ஜெயிச்சா... சொல்லவே வேண்டாம்,  ஊரே அமர்களமாகுது ! சமயங்களில்  ஏழைகளின் குடிசைகளும் பட்டசுக்களால் எரிகின்றன!

       முன்பெல்லாம் தீபாவளிக்கு  ஒருவாரமோ,பத்து நாட்களுக்கு முன்போ பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடக்கும்! ஆனால், இப்போது ஆண்டுமுழுவதும் கடைகளில் வியாபாரம் செய்யபடுகிறது! நகரங்களில் முக்கிய சாலைகள்,மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களிலும் பட்டாசு குடோன்கள்  எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் ஸ்டாக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது!

       எந்த நேரத்தில் எந்த இடத்தில வெடிக்குமோ?,விபத்து ஏற்படுமோ!,மனித உயிர்கள்இழப்பும்  பொருளாதார பதிப்பும்  ஏற்படுமோ? என்று  நமக்கு கவலை ஏற்படுகிறது! ஆனால் இவைகளையெல்லாம்  கவனிக்கவேண்டிய,  தடுக்க வேண்டிய அரசும் அதிகாரிகளும் அதிகாரிகள்  கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்!


        பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் தேவையற்ற  உற்பத்திப் பொருளான  பட்டாசு  உற்பத்தியை,இத்தனை ஆபத்துக்களுக்கு பிறகும்  ஏன் தொடரவேண்டும்? தொடர்ந்து நடத்த அரசு அனுமதிக்கவேண்டும்?அரசும் சமூக நலத்தில்,சுற்று சூழலில் அக்கறையுள்ளவர்களும் சிந்திக்க வேண்டும்!

     மக்களின் காசையும் கரியாக்கி,நமது நாட்டையும் மாசுபடுத்தும்  பட்டாசுகளை,  ஏன் உற்பத்தி செய்ய வேண்டும்? அதனால் நாட்டுக்கு என்ன பெரிய வருவாய் கிடைத்துவிடப்போகிறது? அப்படியே கிடைத்தாலும் அந்த  வருவாய் நமக்கு தேவைதானா?  பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகளுக்கு அது ஈடாகுமா? யோசியுங்கள்!

      பட்டாசு தொழில் ஈடுபடும் அப்பாவி தொழிலாளர்களுக்கு, அவர்கள்  செத்தபிறகு கொடுக்கும் அரசு கொடுக்கும்  நிவாரணங்களை...தொழிலாளர்கள்  உயிருடன் இருக்கும்போதே,  அவர்களுக்கு  வட்டி இல்லாத கடனாகவோ, உதவித் தொகையாகவோ வழங்கி,அவர்களை  பாதுகாப்பான வேறு தொழில்களை செய்யவும்,வேறு தொழிலில் ஈடுபடுத்தவும் அரசுகள் முன்வரவேண்டும்! நிரந்தரமாக பட்டாசு போன்ற மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொழில்களை தடை செய்யவேண்டும்! அப்படி செய்யாமல்  பேருக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் எந்தபிரயோசனமும் ஏற்படப்போவதில்லை!!

     அப்பாவிப் பொதுமக்களின்  உயிருக்கு  அப்போதுதான் அரசுகள்  மதிப்பளிப்பதாக  இருக்கும்! இல்லையென்றால்,சிவகாசி விபத்துகள்   தொடர்வதும்  மனித உயிர்கள் பலியாவதும் தடுக்கமுடியாது!

 நடவடிக்கை!

Comments

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?