கண்ணதாசனின் சிந்தனைக் குழப்பத்தில் செழித்த கவிதைகள்!

               இருபதாம் நூற்றாண்டில் சினிமா,இலக்கியம்,அரசியல்,ஆன்மீகம்  போன்ற பலதுறைகளில்  தாக்கத்தை ஏற்படுத்திய  தமிழ் படைப்பாளிகளில் குறிப்பிடத் தக்கவர்களில்  முதன்மையானவர்,கவியரசு கண்ணதாசன் என்பது எனது கருத்தாகும்! நான் அதிகம் படித்த கதைகள்,கவிதைகள்  கண்ணதாசனும் எழுத்தாளர் சுஜாதாவும் எழுதியவைகள்தான்! இவர்களது எழுத்துக்களை எனது பள்ளி,கல்லூரி காலங்களில்,  வாசித்தேன் என்பதைவிட சுவாசித்தேன் !என்று கூறுவது  பொருத்தமாக இருக்கும்! அப்படி ஒரு ஈர்ப்பும்,லயிப்பும்  இவர்களது எழுத்துகளின் மீது எனக்கு இருந்தது!


             ஒருவர் மீது அதிக ஈடுபாடும்,பிரியமும் நமக்கு இருந்தால்,அவர்களது குறைகள்,தவறுகள் கூட நமக்கு தெரியாது என்று சொல்லுவார்கள்! சுஜாதாவைப் பற்றி,கண்ணதாசனைப் பற்றி யாரவது தவறாக விமர்சித்தால்,பேசினால் எனக்கு   கோபம்வரும்! என்னைக் கோபபட வைக்கவும்,ஆத்திரமூட்டி,கிண்டல் செய்யவும் நினைக்கும் எனது நண்பர்கள்,தேவையே இன்றி பேச்சினூடே   கண்ணதாசனை பற்றி  விமர்சிப்பார்கள்! அவர்களுக்கு பதில் சொல்லுவதற்கு என்று  இன்னும் ஆழமாகவும், சிந்தனையுடனும்  அவர்களது படைப்புகளை படிக்க ஆரம்பித்து விடுவேன்!          இந்துமதத்தை வெறுத்து நாத்திகம் பேசிய  கண்ணதாசன்,  அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியது  ஒரு அழகிய முரண்பாடு! அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அவரே  இயேசு காவியம் என்றொரு கவிதை நூலை பிறகு எழுதியது,மற்றொரு சிறந்த முரண்பாடு!!  இந்த முரண்பாடுகள் ஏன் என்று கேட்டால் என்னால் எப்படி பதில் சொல்லமுடியும்?
      " நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
      எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை! "
என்று பாடிய அவரே, தான் இறந்து விட்டபின்பு...  தன்னைப் பற்றி எப்படியெல்லாம் நினைவு கூறுவார்கள்,அஞ்சலி செலுத்துவார்கள் என்று  "இருந்து பாடிய இரங்கற்பா" கவிதை எழுதி உள்ளாரே? என்று கேட்டால் என்னால் அப்போது பதில் சொல்ல தெரியாது!


         மரணம் எனபது  எல்லோருக்கும் பொதுவானது, உயிர்களுக்கு பிறப்பு என்று ஒன்று இருக்கும் வரை  இறப்பு என்பதும் இருக்கும்   இது இயற்கையின் நியதி! 

   "முதலைத்  தொடர்ந்து,
    முடிவொன்று தோன்றும்!
   முடிவைத் தொடர்ந்து,
   முதலொன்று தோன்றும்!! "
-என்றும்,

   "காமுகனும் மாண்டான்,
     கடவுள் நெறி பேசும்;
     மாமுனியும் மாண்டான்! "
  -என்றும்

   "இன்னதுதான் இப்படிதான்,
     என்பதெல்லாம் பொய் கணக்கு;
     இறைவனிடம் உள்ளதடா,
     எப்போதும் உன் வழக்கு!"
  -என்றும் கண்ணதாசன் கவிதை எழுதி உள்ளதுடன்,

   "தோன்றி வரும் அத்தனைக்கும்'
              ஊன்றும் இடம் உண்டுஎனினும்;
      சான்று சொல்லும் காலம் அதன் முடிவை!இதில்
              தப்பியவர் யாரும் இல்லை,அழிவை!" 
என்றும் எழுதி உள்ளார்!

              எனவே அவர்க்கு  இறப்பு குறித்து தெளிவான பார்வையும், உண்மையும் தெரிந்து இருகிறது!   என்று சொல்லி இருப்பேன்!   அவரது சிந்தனைக் குழப்பத்தைக் காட்டுவதாக  இல்லை!  என்று தெளிவு படுத்தியும் இருப்பேன். இப்போது கண்ணதாசன் பற்றி விவாதிக்கும் நண்பர்களும் அருகில்  இல்லை! கண்ணதாசனும் நம்மோடு(என்னோடு) இல்லை! அவரது கவிதைகளில், கதைகளில்,எழுத்து நடையில், தத்துவத்தில்,பாடல்களில்  மனதைப் பறி கொடுத்த நானின்று,  அவரது  கருத்துகள் பலவற்றிலும் முரண்படுகிறேன்!  காலமாற்றமும், எனது அனுபவமும்  கண்ணதாசனை மட்டுமல்ல, கடவுளைக் கூட  ஆய்ந்து அறியாமல் ஏற்றுகொள்ள மாறுகிறது!


        இருந்தும்,கண்ணதாசனின் கவிதைகள் பலவும்  ஏன் நெஞ்சில் நிழலாடும் கவிதைகளாக இருகின்றன! காரணம், தமிழின் இனிமையும், மொழி அழகும்! என்னை  இன்றும் ஆசுவாசப் படுத்தும் அவரது  எளிய தத்துவங்களும் தான்! இறந்துவிடுவோம் என்று தெரிந்து இருந்த  கண்ணதாசன்,   அவர்  உயரோடு இருக்கும் போதே பாடிய......

அவரது,  'இரங்கற்பா'  கவிதையில்  சிலவரிகள்:

    வாக்குரிமை கொண்டானை, வழக்குரிமை
            கொண்டானை; வாத மன்றில்'
    தாக்குரிமை கொண்டானை, தமிழுரிமை
            கொண்டானை; தமிழ் விளைந்த,
    நாக்குரிமை கொண்டானை; நமதுரிமை!
             என்றந்த  நமனும் வாங்கி,
    போக்குரிமை கொண்டானே! போயுரிமை நாம்,
           கேட்டால் பொருள் செய்வானோ?


            கண்ணதாசனின்  சிந்தனைக் குழப்பமோ, தெளிவோ ஏது எப்படி இருபினும் தமிழுக்கு கிடைத்த கவிதைகளுக்காக அவரை நினைக்காமல் இருக்க முடியாது!


Comments

 1. எதிலும் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் சுபாவம் கொண்டவராக இருந்ததனால் அவரது கருத்துக்களில் நிறைய முரண்பாடுகள் இருந்தன என்பது உண்மையே. அதனைக் கட்டுப்படுத்துவதற்கோ வடிகட்டி எழுத்தில் கொண்டுவருவதற்கோ நேரமோ காலமோ அவரை அனுமதித்ததில்லை. அதனால் அவ்வப்போது மனதில் நினைத்ததை எல்லாம் பேசியும் எழுதியும் வந்தவர் அவர். முரண்பாடுகள் ஒருபக்கம் இருந்தாலும் அவரது அனுபவங்கள் மிக அதிகம். ஒரு வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய அத்தனை நிகழ்வுகளையும் சந்தர்ப்பங்களையும் பற்றி எழுதிய ஒரே கவிஞர் அவர்தான். தவிர அவரது மொழிவளத்திற்கு இணை எந்தக்கவிஞரும் கிடையாது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஒரு சிறந்த கவிஞனைப் பற்றிய அலசல் சிலிர்ப்பாக இருக்கிறது !

  ReplyDelete
 3. சரியாக கண்ணதாசனைப் பற்றி புரிந்து கொண்டு உள்ளீர்கள்! அமுதவனுக்கு எனது மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 4. கண்ணதாசன் சிறந்த கவிஞர் மட்டுமில்லை ஹேமா, என்னை சிதைத்த கவிஞரும் கூடத்தான்! தங்களுக்கு நன்றி!!

  ReplyDelete
 5. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
  நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே...
  கண்ணதாசனின் வரிகள்
  இன்னும் தெரிந்து கொள்ள ஆவல் தொடருங்கள் நன்றி .

  ReplyDelete
 6. நன்றி சசிகலா மேடம். நிச்சயம் தொடருவேன்! நீங்களும் தொடருங்கள்!!

  ReplyDelete
 7. நீங்கள் கூறும் முரண்பாடுகள் உண்மைதான்.ஆனால் அவர் நாத்திகனாக இருந்தது என்னவோ மூன்று ஆண்டுகள் மட்டுமே.அது வெறும் வயதின் கோளாறு என்று அவரே அர்த்தமுள்ள இந்து மதத்தில் கூறியிருக்கிறார்

  ReplyDelete

Post a comment

Popular

சிதம்பரம் கோயில் ரகசியங்கள் !

குந்தவை மதம் மாறியது எப்போது?

குந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்!.

ராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்!

ஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்?